க்ரைம்

"நகக்கீறல் கொடுத்த Clue"... சிக்கிய காமக் கொடூரன்!" - விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. கைது செய்யப்பட்ட 30 வயது வாலிபர்!

சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து 9 நாட்களாக விசாரணை நடத்தினர்...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த (மார்ச் 11) ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி இந்த தம்பதிக்கு 17 வயது மகள் இருந்த நிலையில் அவர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த (மார்ச் 10) ஆம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றதாக சொல்லப்படுகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை தேடிய நிலையில் அவர் எங்கு தேடியும் கிடைக்காமல் இருந்திருக்கிறார். எனவே போலீசாரிடம் புகைரளித்து தேடி வந்த நிலையில் மறுநாள் காலை காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதனை தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. சந்தேகத்திற்குரிய மற்றும் குற்றப்பின்னணி கொண்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து 9 நாட்களாக விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒரு குற்றவாளியை கைது செய்திருப்பதாகவும் தென்மண்டல காவல்துறை தலைவர் (IG) விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

பிளஸ் டூ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் திருட்டு இருசக்கர வாகனத்தில் காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து சென்னையில் வைத்து கைது செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிடிபட்ட 30 வயது வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் உடலில் நகக்கீறல்கள் இருந்ததை தொடர்ந்து உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகளின் டி.என்.ஏ (DNA) சோதனை மாதிரி அந்த இளைஞரின் டி.என்.ஏ- வுடன் ஒத்துப்போனதால் அவர் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த இளைஞர் மாணவியை எப்படி கடத்தினார், எதற்காக இப்படி செய்தார், கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவரை முறையாகக் கைது செய்தால் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், போலீசார் அனைத்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் திரட்டிய பிறகே முறைப்படி கைதைக் காட்டியுள்ளனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.