சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகையாற்று முட்புதருக்குள் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட 31 வயது பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபர், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில் உள்ள முட்புதருக்குள் நேற்று(நவ 01) 31 வயது பெண் ஒருவர் உடலில் காயங்களுடனும், கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான தடயங்களுடனும் பேச்சுமூச்சின்றிக் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். இதையடுத்து, மானாமதுரை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த பெண் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பதும், அவரது கணவர் சரவணன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாசானம் என்பவருக்கும் முத்துலட்சுமிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணத்துக்கு புறம்பான உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் சொந்த ஊரிலிருந்து வெளியேறி மானாமதுரைக்கு வந்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
ஆனால், சில நாட்களிலேயே முத்துலட்சுமியின் மீது மாசானம் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், திடீரென முத்துலட்சுமியைப் பிரிந்து மாசானம் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த முத்துலட்சுமி, தனது கணவர் சரவணனை மீண்டும் தொடர்புகொண்டு பேசி சமாதானம் செய்துள்ளார். இதையடுத்து, அவரை மானாமதுரைக்கு வரவழைத்து இருவரும் மீண்டும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, முத்துலட்சுமியைப் பிரிந்து சென்ற மாசானம் மீண்டும் அவரைத் தொடர்புகொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால், முத்துலட்சுமி பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஒருமுறை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் எனக் கூறி, முத்துலட்சுமியை வைகையாற்றுப் பகுதிக்கு மாசானம் அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முத்துலட்சுமியை முட்புதருக்குள் தள்ளி மாசானம் கடுமையாகத் தாக்கியதாகவும், பின்னர் அவரது கழுத்தில் துப்பட்டாவைப் போட்டு நெரித்துக் கொலை செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். மயக்கடைந்த அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த மாசானம், அவரை அங்கேயே விட்டுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான அரியூருக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் மாசானத்துக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மாசானத்தைக் கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.