ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராப்தாட்டில் பள்ளி மாணவி மீது மின்சார ரம்பத்தால் கொடூரத் தாக்குதல் நடத்திய வழக்கில், முக்கியக் குற்றவாளி ஹேமந்த் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். போலீசாரிடம் சிக்கிய அவர், "கும்பிட்டு கேட்கிறேன் சார்.. என்னைக் காப்பாற்றுங்கள்!" எனக் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராப்தாடு மண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி 15 வயதுடைய கோபிகா லட்சுமி இவரது துரத்து உறவினரான 21 வயதுடைய ஹேமந்த் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு “இனிமேல் தொந்தரவு செய்தால் தாய் தந்தையிடம் சொல்லி விடுவேன் என எச்சரித்துள்ளார்” இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த் கடந்த (அக் 31) ஆம் தேதி மாணவியின் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மின்சார ரம்பத்தால் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாணவியின் முகம், தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதைக் கண்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்துள்ளார். இதற்கிடையே, மாணவியைத் தாக்க தப்பிய முக்கியக் குற்றவாளியான ஹேமந்தைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆத்மகூர் வனப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ஹேமந்தைப் பிடிக்க முயன்றபோது அவர் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேஸ்வரலுவைக் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காகவும், அவர் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். இதில் காயமடைந்த ஹேமந்த், அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவர், "கும்பிட்டு கேட்கிறேன் சார்.. என்னைக் காப்பாற்றுங்கள்!" என போலீசாரிடம் கதறிக் கெஞ்சியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மாணவி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், 'போலீஸ் ஜிந்தாபாத்' எனக் கோஷமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவி மீது மின்சார ரம்பத்தால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும், அதன்பிறகு குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீதே அவர் தாக்குதல் நடத்திய சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்