கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, முன்விரோதம் காரணமாக 86 வயது முதியவரைத் தீ வைத்து எரித்துக் கொலை செய்ததாக எதிர்வீட்டில் வசிக்கும் 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலைச் சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர், முதியவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மச்சிகாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி.
இவரது எதிர்வீட்டில் 40 வயதுடைய ஆல்பிரட் ஆஸ்பின் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே மது அருந்துவதில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று(நவ 13) இரவு ஆல்பிரட் ஆஸ்பின், ஜெபமணியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியதுடன், தகராறிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை ஜெபமணி தட்டிக்கேட்டபோது, அவரைத் தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஜெபமணி, சம்பவம் குறித்து புகார் அளிப்பதற்காக மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். புகார் அளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது வீட்டிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது 86 வயது தந்தை குழந்தைவேல் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆல்பிரட் ஆஸ்பின், முதியவர் மீது துணிகளைப் போட்டு, அதன் மீது பாமாயிலை ஊற்றி தீ வைத்ததாக ஜெபமணி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெபமணி அளித்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தீயில் கருகிய நிலையில் கிடந்த குழந்தைவேலின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, முதியவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஆல்பிரட் ஆஸ்பினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக 86 வயது முதியவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.