செஞ்சி சிறுமி வழக்கில் புதிய "திருப்பம்".. காப்புக் காட்டில் கிடைத்த எலும்புக் கூடு.. அச்சத்தில் கிராம மக்கள்! - என்ன தான் நடக்கிறது?

கிராம மக்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்...
Gingee 7 Year Old Girl Missing Case
Gingee 7 Year Old Girl Missing Case
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி மாயமாகி இன்றுடன் 33 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், வனப்பகுதியில் 4 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 23 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாகச் சிறுமியின் மாயம் தொடர்பான செல்போன் அழைப்பு பதிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள், சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இருப்பினும், சிறுமி குறித்த எந்த உறுதியான தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோருடன் வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், வழக்கை முற்றிலும் புதிய கோணத்தில் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று(நவ 13) டிஎஸ்பிக்கள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையில் 4 தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் வனத்துறையினர், தனிப்படை போலீசார், உள்ளூர் போலீசார், கிராமத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் சிபிசிஐடி போலீசார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த 4 குழுக்களும் ஆலம்பூண்டி அருகே உள்ள சிறுவாடி காப்புக்காடு மற்றும் அங்குள்ள பாறைகள், புதர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றன.

விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ACE, JACK ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் காப்புக்காடு பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேடுதல் பணியின்போது, ஒரு குழுவினரின் பார்வையில் எலும்புக்கூடு ஒன்று தென்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அருகில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அது மனித எலும்புக்கூடு அல்ல, குரங்கின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்த நிலையில், தேடுதல் பணி மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஆலம்பூண்டி செங்கல் சூளைக்கு அருகில் உள்ள காப்புக்கட்டில் உள்ள பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் சிறுமியின் வீட்டிற்கு மிக அருகில் உள்ளதால் மீண்டும் கிராம மக்கள் இடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் எலும்புக் கூட்டை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிறுமி மாயமாகி 33 நாட்களாகியும் எந்தத் தடயமும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் கவலையில் உள்ளனர். சிபிசிஐடி போலீசார் தற்போது தொடங்கியுள்ள இந்தத் தீவிர தேடுதல் வேட்டையில் சிறுமி குறித்த ஏதேனும் முக்கியத் தடயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்