க்ரைம்

ஆன்லைனில் கடனா..? ஏமாற்றி பணம் பறித்த கும்பல்...மடக்கி பிடித்த போலீசார்...!

Tamil Selvi Selvakumar

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த  3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மணிகண்டனை டார்க்கட் செய்த கும்பல்:

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனிடம் தொடர்பு கொண்ட நிதி நிறுவனத்தினர்,  2 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளனர். இதனை உணமை என நம்பிய மணிகண்டனிடம், பிராசஸிங் கட்டணம்  என்று கூறி பல தவணைகளாக மொத்தம் 67 ஆயிரத்து 880 ரூபாயை வங்கிக்கணக்கு வாயிலாக வசூலித்துள்ளனர். இருப்பினும், மணிகண்டனுக்கு கடன் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன், நிதி நிறுவனத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். 

டிமிக்கி கொடுத்த நிதி நிறுவனம்:

மணிகண்டன் கேட்டும் பணத்தை கொடுக்காத நிதிநிறுவனம், வருமான வரி தாக்கல்  செய்யவேண்டும், வங்கி கணக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பொய் மேல் பொய் கூறி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சுருட்டியுள்ளனர். இப்படியே பொய்யாக கூறி மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மணிகண்டனிடம் இருந்து பறித்துள்ளனர்.

போலீசில் புகார்:

இப்படியே ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு பணத்தை பறித்துக்கொண்டு இருந்ததால், சந்தேகமடைந்த மணிகண்டன் இறுதியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மயிலாடுத்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

வெளியான உண்மை:

விசாரணையில், மணிகண்டனை ஏமாற்றி பணம் பறித்த நிதி நிறுவனம் கும்பல் சென்னையை தலைமையிடமாக கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து பணமோசடியில் ஈடுபட்ட சஞ்சய், சித்தார்த்தன் மற்றும் சையது அப்துல்கலாம் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 16 செல்போன்கள், 28 சிம் கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் தலைமறைவான அமர்நாத் மற்றும் கணேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா:

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவணங்களை கொடுக்க வேண்டாம் எனவும், லோன் கொடுப்பதாக கூறுவதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.