திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர் பழனிச்சாமி. இவரும் இவரது மனைவி தனலட்சுமியும் பனியன் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களது மகள் பூவரசி கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பழனிச்சாமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் மனைவி தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தாய் மகள் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள்ளே வந்து பார்த்த பொழுது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபரை பிடித்து வைத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் இருவரின் பிரேதங்களையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பிடித்து வைத்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த ஐந்து வருடங்களாக பூவரசியும் அக்ஷயும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். பின்னர் காதலிக்க தொடங்கிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தை மறைத்து பூவரசி அவரது வீட்டிலேயே தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பூவரசியின் தாயார் தனலட்சுமிக்கு இவரது இன்ஸ்டாகிராம் காதலும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனலட்சுமி பூவரசியை இனிமேல் அக்ஷய் உடன் பேசக்கூடாது என்று கண்டித்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பூவரசியிடம் பலமுறை அக்ஷய் பேச முயன்ற போதும் பூவரசி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் இன்று காலை பூவரசியின் வீட்டுக்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூவரசி மற்றும் அவரது தாயார் தனலட்சுமி இருவரையும் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அக்ஷயை கைது செய்த பல்லடம் காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து தாய் மற்றும் மகளை காதலனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.