க்ரைம்

“பெற்ற தாயை டம்பல்ஸால் அடித்துக் கொலை” – குடிபோதைக்கு அடிமையான மகனின் வெறிச்செயல்!

நாளடைவில் மது போதைக்கு அடிமையான வெங்கடேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு

Muthu Lakshmi

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பல்ஸ் கொண்டு தலையில் தாக்கி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணப்பாறை அருகே கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மனைவி செல்வி (50). இவருக்கு செல்வம், வெங்கடேசன், கவினேஷ் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான வெங்கடேசனுக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு மனைவி லாவண்யா மற்றும் ஒரு மகளும் உள்ளனர். நாளடைவில் மது போதைக்கு அடிமையான வெங்கடேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கடேசன் தனது தாயுடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது தந்தை கணேசனும், தாய் செல்வியும் சொத்தை தனது அண்ணன் மற்றும் தம்பிக்கு மட்டும் பிரித்துக் கொடுத்துவிட்டதாகக் கூறி, வெங்கடேசன் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில், தனக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறி தாய் செல்வியிடம் வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, செல்வி “நீ வேலைக்கு போகாம எப்போதும் குடிச்சிட்டு போதையில் இருக்குற.. உனக்கு சொத்தைப் பிரிச்சுக் கொடுக்க முடியாது” என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகன் வெங்கடேசன், வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்காக பயன்படுத்தப்படும் டம்பல்ஸ் எடுத்து தனது தாய் செல்வியின் தலையில் தாக்கி உள்ளார். இதில் செல்வியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூளை சிதறும் அளவிற்கு தாக்கியுள்ளார். உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பெற்ற தாயை மகனே டம்பல்ஸ் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்