ராஜஸ்தானில் காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், பெண் ஒருவர் தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 13 வயது இரட்டை மகன்களைக் கொலை செய்ததாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மணி நேரத்திற்குள் நடந்த விசாரணையில் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், டீக் மாவட்டத்தில், வயல்வெளியில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் இறந்த நிலையில் கிடப்பதாக தசரா தினத்தன்று போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினார்கள். இறந்த சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி, தடயங்களைச் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது, அவர்கள் வினய் மற்றும் விஷ்ணு என்ற இரட்டை சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் தாய் பிரீத்தியின் நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக, கொலை சம்பவம் தொடர்பாக சுமார் ஆறு மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, பிரீத்தியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது இரண்டு மகன்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், பெண்ணின் காதலன், அவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருப்பதை காரணம் காட்டி, திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த பெண் தனது இரு மகன்களைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் கூட்டம் அதிகரித்ததால், தடயங்களை பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷரன் கோபிநாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மோப்ப நாய், தடய அறிவியல் ஆய்வக குழு உள்ளிட்ட சிறப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் சுற்றியுள்ள வயல்வெளிகளிலும் விசாரணை நடத்தினர்.
சுமார் ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு கிடைத்த முக்கியத் துப்பின் அடிப்படையில் சிறுவர்களின் தாயைக் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொலை சமபத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா.. எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், உடைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறுவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.