ஹைதராபாத் பெண் ஒருவர், கள்ளத்தொடர்புக்கு தடையாக இருந்ததாக கருதி, தனது 6 வயது மகளை திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் அல்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சா பொல்லாரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
காவல்துறையினரின் தகவலின்படி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரேகா என்ற பெண், கடந்த 2020ஆம் ஆண்டு தனது தூரத்து உறவினரான ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக, இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தன்விகா என்ற 6 வயது மகள் இருந்துள்ளார்.
இதற்கிடையில், ரேகா தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 20 வயதான சாய்குமார் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது, அவர்களின் உறவுக்கு குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சிறுமியான தன்விகா தான் எதிர்கால வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாக ரேகாவும் சாய்குமாரும் கருதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆரம்பத்தில், சிறுமியை ஆல்வால் ஏரியில் தள்ளிவிட்டு கொலை செய்ய திட்டமிட்டதாகவும், பின்னர் அந்த திட்டத்தை மாற்றி வீட்டின் மேல் தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மே 16ஆம் தேதி, ரேகாவின் தம்பி வீட்டிற்கு வெளியே சென்றிருந்த நேரத்தில், “விளையாடலாம்” என்று கூறி மகள் தன்விகாவை மாடிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி மூழ்கடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்திற்குப் பிறகு, குழந்தை காணவில்லை என நாடகமாடிய ரேகா, அக்கம் பக்கத்தினரிடமும் தேடும் முயற்சியில் ஈடுபட்டது போல நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், விசாரணையின் போது ரேகாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ரேகா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், சாய்குமாரின் அழுத்தம் மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான ஆசை காரணமாகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ரேகா மற்றும் சாய்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.