கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, ஒன்றரை வயது குழந்தையை அதன் தாயே கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கொன்ற பின்னர் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் விலவூர்க்கல் பகுதியில் உள்ள பொட்டையில், மருத்துவமனை அருகே உள்ள வீட்டில் வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அபிஜித் மற்றும் கிறிஸ்டி தம்பதியின் ஒன்றரை வயது மகள் அன்னா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று மதிய உணவுக்குப் பிறகு கிறிஸ்டி தனது ஒன்றரை வயது குழந்தையை அழைத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடியதாக கூறப்படுகிறது. பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நீண்ட நேரமாக தாயும் குழந்தையும் வெளியே வராததால், வீட்டில் இருந்த அபிஜித்தின் தாய் ஜசிந்தா, அவர்கள் இருந்த அறை கதவைத் தட்டியுள்ளார். பின்னர் கிறிஸ்டி கதவைத் திறந்தபோது, குழந்தை தரையில் ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்ததை ஜசிந்தா பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது, கிறிஸ்டி தான் குழந்தையைக் கொன்றுவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஜசிந்தா, குழந்தையை தூக்கிக்கொண்டு அலறியபடி வெளியே ஓடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை முதலில் விலவூர்க்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயமே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இதையடுத்து மலையின்கீழ் போலீசார் BNS சட்டத்தின் 103(1)-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டிக்கும் அவரது கணவர் அபிஜித்துக்கும் இடையே தொடர்ந்து குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. கணவர் மீதான சந்தேகம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட திருமண வாழ்க்கை பிரச்சனைகளே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சில காலம் தனது வீட்டில் இருந்த கிறிஸ்டி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. இந்தத் தம்பதியினர் பாளையம் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டதாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குழந்தையை கொன்றதாகக் கூறப்படும் கிறிஸ்டி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கிறிஸ்டிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு உள்ளிட்ட ஏதேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்தனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தது குறித்து அக்கம்பக்கத்தினருக்கோ உறவினர்களுக்கோ முன்கூட்டியே தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.