விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் நந்தினி மற்றும் அவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கல்லறை தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பொன்லட்சுமி என்ற மனைவி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெகநாதன் வெளிநாடுகளில் வேலை செய்து வந்ததாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது குடும்பத்தினர் பலரிடம் சீட்டு பணம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜெகநாதனுக்கு நந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நந்தினி, பின்னர் ஜெகநாதனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது குடும்பமாகவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நந்தினியின் 4 வயது மகளை ஜெகநாதன் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு சிறுமியின் தாய் நந்தினியும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் அழுகை மற்றும் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறி, ஜெகநாதனும் நந்தினியும் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
அங்கு சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறுமியை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஜெகநாதனும் நந்தினியும் அங்கிருந்து தலைமறைவாகியதாகத் தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஜெகத்பூர் பகுதியில் பதுங்கி இருந்ததாகக் கூறப்படும் ஜெகநாதன் மற்றும் நந்தினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள், பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டு மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சிறுமிக்கு எதிராக இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றனவா, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியை நரபலி கொடுக்க முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணையின் கட்டத்தில் உள்ள நிலையில், போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.