

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப் என்பவரும், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், சந்திப்பதற்காக சிறுமியை ஈரோட்டுக்கு வரவழைத்த பிரதீப், VOC பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார் பிரதீப். அதன்பிறகு சிறுமியுடன் தொலைபேசி தொடர்பை முற்றிலும் துண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணின் அழைப்பையும் முற்றிலும் தவிர்த்து விலகியுள்ளார்.
இதையடுத்து சந்தேமடைந்த அந்த சிறுமி பிரதீப் வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது, கடந்த 18.06.2026 அன்று பிரதீப், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து பிரதீப்பின் பெற்றோரிடம் கேட்ட போது, “இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது” எனக் கூறி மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயாரும் 1098 தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் பிரதீப் மற்றும் அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணைக்காக பிரதீப்பை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் சேலத்தை சேர்ந்த பிரதீப் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.