க்ரைம்

“7 நாட்களாக ரயில் பெட்டிக்குள் கிடந்த பெண்ணின் சடலம்?” - துப்புரவுப் பணியின்போது கண்டுபிடிப்பு.. கொலை செய்து வீசப்பட்டாரா?

பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாறு ரயில் நிலைய யார்டில் கடந்த (நவ 11) ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட ரயில் பெட்டி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த பெட்டியை வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று(நவ 18) காலை வழக்கம்போல் துப்புரவுப் பணிக்காகப் பணியாளர்கள் அந்த ரயில் பெட்டிக்குள் சென்றுள்ளனர். அப்போது பெட்டியின் உள்ளே பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக நாகர்கோவில் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் பெட்டி நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால், அந்தப் பெண் உயிரிழந்து சுமார் 5 முதல் 7 நாட்கள் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் கணித்துள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த பெண் யார்? அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? ரயில் பெட்டிக்குள் அவர் எப்போது வந்தார்? எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா, கொலை என்றால் சடலம் எப்படி ரயில் பெட்டிக்குள் கொண்டுவரப்பட்டது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.