அரியானாவில் குர்கான் பகுதியில் ஐஎம்டி மனேசரில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில், பூட்டப்பட்டிருந்த குளியலறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசப்பட்டதையடுத்து 22 வயதுப் பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களான 25 வயதான அங்கித் மற்றும் 38 வயதான ரஜினி தேவி ஆகியோர் ஐந்து நாட்களுக்கு போலீஸ் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரான மது, இந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று அங்கித்தை திருமணம் செய்துள்ளார். மேலும், மனேசரில் அவருடன் வசித்து வந்துள்ளார்.
மே 22 அன்று, மதுவின் தாய் அவர் ஒரு நாள் முன்னதாகவே காணாமல் போய்விட்டதாகக் கூறி காவல்துறையிடம் புகாரைப் பதிவு செய்துள்ளார். தனது புகாரில், மதுவின் இருப்பிடம் குறித்த தகவல்களை அங்கித்தும் அவரது குடும்பத்தினரும் மறைத்து வருவதாகவும், அவர் காணாமல் போனதில் அவர்களுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மது எங்கே சென்றிருக்கலாம்? என்று கேட்பதற்காகக் குடும்பத்தினர் அங்கித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கித் திருப்திகரமான பதில் அளிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று மதுவின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையை அணுகுவது குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று கூறி, அங்கித்தும் அவரது உறவினர்களும் தங்களை மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்ததாகவும் மதுவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை ஆரம்பத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்தது. அன்று பிற்பகலில், காசன் கோ சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு மேலே இருந்த பூட்டப்பட்ட குளியலறையிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். பின்னர், மதுவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது. அப்போதுதான் அந்த இடம் ரஜினி வாடகைக்கு வசித்த வீடு என்பது தெரியவந்தது.
மேலும், சடலத்தின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கொலைக் குற்றச்சாட்டையும் சேர்த்துள்ளனர். விசாரணையின் போது, அங்கித் மனேசரில் ஒரு புகையிலைக் கடை நடத்தி வருவதும், ரஜினி அப்பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததும் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இருவரும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும், திருமணமும் செய்துகொண்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாக, அங்கித் மே 21 அன்று மதுவை ரஜினியின் அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்துள்ளனர். கொலைக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அங்கித் இந்தக் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியை உத்தரப் பிரதேசத்திலிருந்து பெற்றுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ரஜினியுடன் அங்கித்துக்கு இருந்த உறவே இந்தக் கொலைக்கான காரணம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பிறகு, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக இருவரும் முதலில் ஹரித்வாருக்கும் பின்னர் நேபாளத்திற்கும் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஜூன் 30 அன்று இந்தியா திரும்பியுள்ளனர். பின்னர் போலீசாரால் பின்தொடர்ந்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்,” என்று அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். மதுவின் திருமணத்திற்கு முன்பு அங்கித், ரஜினியுடனான தனது உறவை மறைத்து வந்ததாக மதுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மது காணாமல் போன பின்னரே ரஜினியைப் பற்றித் தங்களுக்குத் தெரியவந்ததாகவும், இந்தக் காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் எனச் சந்தேகித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை ஆயுதத்தை மீட்கவும், மேலதிக ஆதாரங்களைச் சேகரிக்கவும் புலனாய்வாளர்கள் தற்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை மறைக்க அல்லது கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவியதில், வேறு யாருக்காவது பங்கு உள்ளதா? என்பதையும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.