Oragadam Woman Suicide 
க்ரைம்

“3 ஆண்டுகளாகக் காதலித்து திருமணம் செய்ய மறுப்பு!” - மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. காதலன் கைது!

இருவரும் பேசி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது...

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் மேம்பாலத்தில் 23 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இளைஞர், திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் உள்ள ஓரகடம் மேம்பாலத்தில் சில நாட்களுக்கு முன்பு 23 வயதுடைய சிந்துஜா என்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒரகடம் தனியார் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜாவிற்கும் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கோபிநாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பேசி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் இதற்கிடையே, கடந்த 2 மாதங்களாக கோபிநாத் சிந்துஜாவிடம் சரியாகப் பேசாமல் இருந்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிந்துஜா கல்லூரியில் இருந்து வெளியே வந்து ஒரகடம் பழத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிந்துஜாவின் தற்கொலை தொடர்பாக அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓரகடம் போலீசார் அவரது காதலன் கோபிநாத்தைக் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.