மதுரை மாநகர் பார்க் டவுண் 2-ஆவது தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இவர் மதுரை முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்துவருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர்.
ராஜ்குமார் நேற்று இரவு தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது தனது மனைவி சந்திரகலாவிற்கு போன் செய்த ராஜ்குமார் கடைக்கு போக வேண்டும் பிரதான சாலைக்கு வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து ராஜ்குமாரின் மனைவி சந்திரகலா தனது வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக நடந்துசென்றுள்ளார்.
அப்போது சாலையில் தெருவிளக்குகள் எரியாத நிலையில் வீட்டின் அருகிலயே தனது கணவரின் பைக் நிற்பதை கண்டு அருகில் சென்றுபார்த்த போது தனது கணவர் ராஜ்குமார் ரத்தவெள்ளத்தில் பைக் அருகே சாலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து ராஜ்குமாரின் மனைவி சந்திரகலா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துவிட்டு காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல்துறையினர் ராஜ்குமாரின் உடலை பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
ராஜ்குமாரை மர்ம நபர்கள் சிலர் வாளால் சரமாரியாக வெட்டியதோடு நெஞ்சில் குத்தி கொலை செய்துவிட்டு, வாளை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வாளால் வெட்டியபோது ராஜ்குமார் தடுத்தபோதிலும் கையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கொலை சம்பவம் நடைபெற்ற பார்க் டவுண் 2 ஆவது தெரு பகுதியில் உள்ள மின்விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் கொலையாளிகள் திட்டம் போட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதன் காரணமாக கொலை சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகளும் தெளிவாக பதிவாகவில்லை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் நேரில்வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு் விசாரணை நடத்தினார்.
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை சேகரித்தனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக தொழில் போட்டியால் நடைபெற்றதா? ஏதேனும் முன்விரோதத்தால் கொலை நடைபெற்றதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வீட்டின் முன்பாக தொழிலதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.