ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே உள்ள பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் (45). இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் ஒருவர் திருமணமாகி பெங்களுருவில் மனைவியுடன் வசித்து வருகிறார். பாப்பம்மாளின் கணவர் மாற்றுத்திறனாளி என்பதால் எந்த வேலைக்கும் செல்வதில்லை.
எனவே பாப்பாமள் ஆடுகளை வளர்த்து அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் கணவரையும் வீட்டில் இருக்கும் மற்றொரு மகனையும் காப்பாற்றி வருகிறார். வழக்கம் போல பாப்பம்மாள் புதன்கிழமை காலை ஆடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் வியாழன் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பாப்பம்மாளின் கணவன் மற்றும் மகன் ஊர் மக்கள் உதவியுடன் காட்டுப் பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளனர்.
அப்போதுதான் பாப்பம்மாள் காட்டிற்கு நடுவே அரை நிர்வாணத்துடன் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து தகவலறிந்து உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓசூர் ஒன்னல்வாடி கிராமத்தில் கடந்த (மார்ச் 19) தேதியில் புதன்கிழமை வீட்டில் இருந்த, இரண்டு முதியவர்களை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். அதே போல் கடந்த (மார்ச் 26) ஓசூர் அடுத்த அட்டகுறிக்கு பகுதியில் நாகம்மாள் என்ற மூதாட்டியையும் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு வீட்டிற்கு தீவைக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவத்திலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டு ஒரு கொலை புதன்கிழமையில் நடந்தது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து புதன் கிழமைகளில் கொலைகள் அரங்கேறுவதும், இரண்டு கொலைகளும் ஒரு மாதிரி நடந்ததையும் வைத்து, சைக்கோ கொலையாளியின் வெளியாக இருக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.
மேலும் இந்த மூன்று கொலைகளிலும், சிசிடிவி காட்சிகள், கைரேகைகள், மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போன்ற எந்த ஆதாரமும் கிடைக்காததால் , போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்