கோபிசெட்டிபாளையம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அருகில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு வந்த வெள்ளியங்கிரி (37) என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மேலும் சிறுமியின் வாயில் செல்லோ டேப் ஒட்டி, அவரை அச்சுறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துபோன சிறுமி இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு சந்தேகமடைந்த தாய், விசாரித்தபோது நடந்த கொடுமையை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். உடனடியாக சிறுமியை பெற்றோர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் விசாரணை நடத்தி, சிறுமியின் பெற்றோருடன் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பெயிண்டிங் தொழிலாளி வெள்ளியங்கிரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெயிண்டிங் தொழிலாளியை கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.