Panruti Newborn Baby Sale Case 
க்ரைம்

“பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை.. ரூ.7 லட்சத்துக்கு விற்பனை” - இடைதரகருடன் சேர்ந்து தாய் செய்த செயல்.. பண்ருட்டியில் அதிர்ச்சி!

ரேணுகாதேவியிடம் ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு, பாத்திமாவிடம் ரூ.4.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாகத் தெரிகிறது...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இடைத்தரகராகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரைச் சேர்ந்தவர் 26 வயதுடைய மஞ்சு என்ற பாத்திமா. இவருக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான பாத்திமா, குடும்பச் சூழல் காரணமாகப் பிறக்கப்போகும் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பண்ருட்டியில் உள்ள செருப்புக் கடையில் வேலை பார்த்தபோது அறிமுகமான அன்வர்ஷா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான் (44) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தையை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை ஜாபர்கான் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த (அக் 19) ஆம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த அருணின் மனைவி ரேணுகாதேவிக்கு 11 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், அவரிடம் குழந்தையை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதன்படி, கடந்த (அக் 22) ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது, பாத்திமா தனது குழந்தையை ரேணுகாதேவியிடம் ஒப்படைத்துள்ளார். இதற்காக ரூ.4.50 லட்சம் கொடுக்கப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜாபர்கான், ரேணுகாதேவியிடம் ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு, பாத்திமாவிடம் ரூ.4.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாத்திமா, தனது கணவருடன் சென்று கூடுதல் பணம் தர வேண்டும் அல்லது குழந்தையைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு ஜாபர்கானிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பண்ருட்டி போலீசாரின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, போலீசார் திருச்சிக்குச் சென்று ரேணுகாதேவியிடம் இருந்த குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தைகள் நலக் காப்பகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராவதி (39) முன்னிலையில் குழந்தை அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சித்ராவதி அளித்த புகாரின் பேரில், குழந்தையின் தாய் பாத்திமா, ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான், அவரது உறவினர் முபாரக்கான் மற்றும் ரேணுகாதேவி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜாபர்கானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைப் பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.