“சொந்த தம்பியை கூலிப்படை தேவி கொன்ற அண்ணன்” - கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்.. சிதறி கிடந்த இரத்தத்தால் வெளிவந்த உண்மை!

மோட்டார் மூலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை...
Kallakurichi Ramesh Murder Case
Kallakurichi Ramesh Murder Case
Published on: 
Updated on: 
3 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்திலிருந்து லக்கிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் குறவன் பாதை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரத்தக்கறைகளும் தலைமுடிகளும் சிதறிக் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வடபொன்பரிப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அருகிலிருந்த கரும்புத் தோட்டம் மற்றும் விவசாயக் கிணற்றைப் பார்வையிட்டனர்.

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கவலைக்கல் காணாமல் போயிருந்ததுடன், அப்பகுதியிலும் ரத்தக்கறைகள் இருந்ததால், யாரேனும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, மோட்டார் மூலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதனால் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கிணற்றுக்குள் தார்ப்பாயால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தார்ப்பாயுடன் தண்ணீர் இறைக்கும் கவலைக்கற்களும் கட்டப்பட்டிருந்தன. அதனை வெளியே எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஷ், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.

Kallakurichi Ramesh Murder Case
Kallakurichi Ramesh Murder Case

போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து, தார்ப்பாயில் சுற்றி கற்களைக் கட்டி கிணற்றில் வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஷ் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ரமேஷ் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டரை சென்ட் நிலம் தொடர்பாக ரமேஷுக்கும் அவரது தம்பி ஆனந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் புதுப்பட்டு கிராமத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ரமேஷை அழைத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, ரமேஷின் தம்பி ஆனந்த் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் செல்போன்கள் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டிருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, விரியூர் காப்புக்காட்டில் பன்னீர்செல்வம் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இரண்டரை சென்ட் நிலத்தகராறு காரணமாக தனது அண்ணன் ரமேஷைக் கொலை செய்ய, அவரது தம்பி ஆனந்த் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக பன்னீர்செல்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக, கடந்த ஒரு வாரமாக ரமேஷுடன் நெருக்கமாகப் பழகி வந்த பன்னீர்செல்வம், கார் வாங்கச் செல்லலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார். லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கார் நிறுவனத்திற்குச் சென்று கார் வாங்குவது போல விலை பேசியுள்ளார். பின்னர், நேரம் சரியில்லை என்றும், வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்றும் கூறி ரமேஷை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரங்கப்பனூர் அருகே உள்ள குறவன் பாதைக்குள் பன்னீர்செல்வம் வாகனத்தைத் திருப்பியுள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்த ரமேஷை, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மூன்று பேருடன் சேர்ந்து பன்னீர்செல்வமும் தாக்கியுள்ளார். நான்கு பேரும் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரது உடலைத் தார்ப்பாயில் சுற்றி, கற்களைக் கட்டி விவசாயக் கிணற்றில் வீசியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சண்முகம், சக்கரவர்த்தி, மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ஆனந்தின் மனைவி பரமேஸ்வரி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரமேஷின் தம்பி ஆனந்த் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.