Panruti 19 Year Old Youth Murder 
க்ரைம்

“வாலிபரை கொன்று உடலை ஏரியில் புதைத்த நண்பர்கள்” - மூன்று நாட்களாக தேடி அலைந்த போலீஸ்.. செல்போன் சிக்னலால் கிடைத்த துப்பு!

இதையடுத்து, அவரது மாமா ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, சென்னையில் நடிகர் சரத்குமார் - ராதிகா வீட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் 19 வயது மகன் மாயமான வழக்கில், அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி கடற்கரை பகுதிக்கு இளைஞரை வரவழைத்து அடித்துக் கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய ரமேஷ். இவரது மனைவி எழில்செல்வி. இந்தத் தம்பதியின் மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் நடிகர் சரத்குமார் - ராதிகா வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரசாந்த் டைல்ஸ் பதிக்கும் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த தனது மாமா ரமேஷுடன் இணைந்து வேலைக்குச் சென்று வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த (அக் 27) ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்ட பிரசாந்த், சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பிரசாந்த் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது மாமா ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தைத் தேடி வந்தனர்.

பிரசாந்தின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிரசாந்துக்கும் அவரது நண்பர்களான தேவராசு, தினேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரசாந்தை பொன்னேரி கடற்கரை பகுதிக்கு வரவழைத்த இருவரும் அவரைத் தாக்கிக் கொலை செய்து அங்கேயே குழி தோண்டி உடலை புதைத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிரசாந்த் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே இளைஞர் மாயமான வழக்கில், அவரது நண்பர்களே கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்