பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், 21 வயது கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் 21 வயதுடைய அபிமன்யு. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியனின் 12 வயது மகளுக்கு அபிமன்யு செல்போன் வாங்கிக் கொடுத்ததாகவும், தொடர்ந்து அந்தச் சிறுமியுடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியன், அபிமன்யுவின் வீட்டிற்குச் சென்று இதுபற்றி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், இரும்புக் கம்பியால் அபிமன்யுவைத் தாக்கியதுடன், கத்தியால் அவரது இடது பக்க மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அபிமன்யு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கைகளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த அபிமன்யுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியனை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் இருந்த உறவினர் வீட்டில் கொலை செய்துவிட்டு மறைந்திருந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான பாலசுப்ரமணியனை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, 21 வயது கல்லூரி மாணவரின் கொலையில் முடிந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.