ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள மம்முட்டி தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதுடைய கிருஷ்ணசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கும், இவரது நெருங்கிய உறவினரும் விவசாயியுமான ரங்கசாமிக்கும் அடுத்தடுத்து நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலங்களுக்கு இடையே உள்ள வழிப்பாதை தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை சீனாபுரம் அடுத்த எருக்கலான்காடு மேடு பகுதியில் வழிப்பாதை மற்றும் நிலம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மாறி மாறி இருதரப்பினரும் வாக்குவாதம் செய்த நிலையில் ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், இந்த மோதலில் பார்த்திபன், மோகன், ரங்கசாமி, தமிழரசு ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நீண்ட நாட்களாக இருந்து வந்த வழிப்பாதை பிரச்சனை எவ்வாறு மோதலாக மாறியது, தாக்குதலில் யார் யார் ஈடுபட்டனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலம் மற்றும் வழிப்பாதை தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கடுமையான மோதலாக மாறி, ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்த சம்பவம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.