சென்னை ஆயிரம் விளக்கு காளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ மெடிக்கல் என்ற மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் கடந்த 25ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை கல்லாப்பெட்டியில் இருந்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீ மெடிக்கல் கடையின் உரிமையாளர் காமராஜ் என்பவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் வைத்து விசாரணை மேற்கொண்டபோது அது போலியான நம்பர் பிளேட் என்பது தெரியவந்தது எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ பாரதி என்பவர் வேலையை முடித்து விட்டு இரவு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நம்பர் பிளேட் கொண்ட இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் செல்வதை கண்டுள்ளார்.
எனவே உடனடியாக தான் சென்ற காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, சாலையில் சென்ற ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று நபர்களையும் சுமார் 300 மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடிக்க முற்பட்டுள்ளார். போலீசாரை பார்த்ததும் மூன்று இளைஞர்களும் வேகமாக தப்பிச் செல்ல முற்படுகையில், பின்னால் இருந்த இளைஞரை உதவி ஆய்வாளர் ராஜபாரதி பிடிக்க, மற்ற இரண்டு நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து பிடிபட்ட நபரை சோதனை செய்தபோது அவரது இடுப்பில் இரண்டரை அடி நீளம் கத்தி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்துள்ளனர். பின் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஆதித்யா என்பதும், இவர் காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான இடத்தில் தங்கி பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவரது நண்பரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமார் மற்றும் அவரது மற்றொரு நண்பரோடு மெடிக்கல் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
சுகுமார் மீது சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், ஆயுத தடைச் சட்டம் மற்றும் கொள்ளை அடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.
மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மெடிக்கல் கடைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதில் ஆதித்யாவின் கை எலும்பு முறிந்தது.
மருத்துவ சிகிச்சைக்கு பின் கைது செய்யப்பட்ட ஆதித்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்க இருசக்கர வாகனம் கொடுத்து உதவி செய்த மற்றொரு கொள்ளையனான பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வீர மணிகண்டன் (25) வரை கைது செய்துள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் மூவரும் மற்றொரு கடையில் கொள்ளை அடிப்பதற்காக திட்டமிட்டு சென்றதும் அதனை காவல் உதவி ஆய்வாளர் முறியடித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.