க்ரைம்

“ஐவி பயணத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்” - பேராசிரியர் செய்த சம்பவம்.. மாணவர்கள் கொடுத்த தக்க தண்டனை!

கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி..

Mahalakshmi Somasundaram

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது, இந்த கல்லூரியில் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் குறிப்பிட்ட துறையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சமீபத்தில் கேரளாவின் மூணாறு பகுதிக்கு 'இண்டஸ்ட்ரியல் விசிட்' சென்றுள்ளனர். இந்த பயணத்தின் போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி மூணாறு சென்று திரும்பியதும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் இதை பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரிவர பதில் தெரிவிக்காததால் மாணவர்களுக்கும் பேராசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் மாணவர்களை பேராசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த மற்ற பேராசிரியர்கள் மாணவர்களை தடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேரன்மகாதேவி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்களான வீரவநல்லூரை சேர்ந்த ஸ்ரீதரன் (20), மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி சுஜின் (20), முத்து ராசு (19), சங்கர் நகரைச் சேர்ந்த ஷேக் முகமது மைதீன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைத் தட்டிக் கேட்ட மாணவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, அக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே, சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரை சரமாரியாகத் தாக்குவதும், சிலர் நாற்காலிகளைத் தூக்கி எறிவதும், கைகளால் தாக்குவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி பேராசிரியர் ஒருவரை ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவம் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.