
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய சிவசூரியன். இவர் தனது அண்ணனான சின்னத்துரையுடன் பைக்கில் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கையொப்பமிட சென்றுள்ளனர். போலீசார் மாலையில் வந்து கையொப்பம் இட வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு பேரும் தட்டார மடத்திலிருந்து வேப்பங்காடு சாலை வழியாக சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் பைக் மீது மோதியது. இதில் சாலையில் கீழே விழுந்து அருகிலுள்ள தோட்டத்திற்குள் ஓடிய சிவ சூரியனை அந்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.
இதில் சிவசூரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது அண்ணன் சின்னத்துரை கார் மோதியதில் காயங்களுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவ சூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பழிக்கு பழியாக சிவசூரியன் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில் நடுவண் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கந்தையா. இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கும் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கந்தையா தினந்தோறும் குடித்து விட்டு சுப்புலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளார்.
இதனை அறிந்த சுப்புலட்சுமியின் பெற்றோர்கள் சுப்புலட்சுமியை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்த சுப்புலட்சுமி சில தினங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கந்தையாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் தாமரை மொழியை சேர்ந்த மணியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
மணியம்மாளுக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் அவரது தம்பியான சிவசூரியனிடம் கந்தையாவின் பெற்றோர்கள் திருமணத்தை பற்றி பேசியுள்ளனர். பின்னர் மணியம்மாள் மற்றும் கந்தையாவிற்கு திருமணம் நடைபெற்ற சூழலில், கந்தையா சுப்பலட்சுமியிடம் நடந்து கொண்டதை போலவே மணியம்மாளிடமும் குடுத்து விட்டு தகராறு செய்து வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார். தனது தம்பியிடம் இதை பற்றி மணியம்மை கூறியுள்ளார்.
எனவே தனது உறவினர்களை அழைத்து கொண்டு கந்தையா வீட்டிற்கு சென்ற சிவசூரியன் தனது அக்காவுடன் வாழுமாறு கந்தையாவிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கந்தையா சிவ சூரியனையும் அவர்களது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த மணியம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தனது அக்காவை இந்த நிலையில் பார்க்க முடியாத சிவசூரியன் மீண்டும் கந்தையா வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனது அக்காவுடன் கந்தையாவை வாழும்படி கெஞ்சியுள்ளார் இதற்கு கந்தையா மறுக்கவே உடல் நிலையை சரி செய்ய பணமாவது கொடுங்கள் என கூறியதற்கு பதிலளித்த கந்தையா "அவ யாரு அவளுக்கு நான் எதுக்கு காசு குடுக்கணும் செத்தா செத்து தொலையாட்டும்” என கூறி அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து சில தினங்களிலேயே மணியம்மாள் உயிரிழந்தார். மணியம்மாள் உயிரிழந்ததை அறிந்து கொண்ட கந்தையா அதே பகுதியை சேர்ந்த இசக்கி தாய் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த சிவசூரியன் தனது அக்காவின் இழப்பிற்கு காரணமான கந்தையாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் (ஜூலை 16) இரவு தட்டார்மடம் பகுதியில் உள்ள சந்தைக்கு வட்டி வசூலிக்க வந்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு அரிவாளுடன் சென்ற சிவசூரியன் கந்தையாவை “இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை காவு வாங்க போற” என கேட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சிவசூரியனை தனிப்படை அமைத்து கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த சிவசூரியனை கந்தையாவின் அண்ணனான 51 வயதுடைய ஆறுமுகம் மற்றும் கந்தையாவின் அக்கா மகன்களான கார்த்திக் என்ற இரண்டு பேரும் முத்துப்பாண்டி என்பவரும் பழிக்கு பழியாக சிவ சூரியனை கொலை செய்ய திட்டமிட்டு இன்று அவரை காரில் பின்தொடர்ந்து காரை வைத்து இடித்து விரட்டி ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.