Pudukkottai Rajarajan Murder 
க்ரைம்

“தந்தையும் வெட்டிக் கொலை.. இப்போது மகனும்..” – தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற அண்ணன்.. அதிமுக பிரமுகர் வீட்டில் குரூரம்!

ராஜராஜனுக்கு வழங்கப்பட்ட வீட்டை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாஜலம். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அதே போல இரண்டாவது மனைவிக்கு ராஜராஜன் உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், அதிமுக அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளராக உள்ள ராஜபாண்டிக்கும், அவரது சகோதரரான ராஜராஜனுக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, வடகாடு பகுதியில் ராஜபாண்டியின் வீட்டிற்கு அருகில் இருந்த ஓட்டு வீடு ராஜராஜனுக்கு சொத்தாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், அந்த வீட்டை ராஜராஜனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்த முடியாத வகையில் ராஜபாண்டி பூட்டி வைத்திருக்கிறார். இதனால் ராஜராஜனும் அவரது குடும்பத்தினரும் குழந்தைகளுடன் வீடின்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜராஜன் தரப்பினர் புகார் மற்றும் மனுக்கள் அளித்ததாகவும், இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜராஜனின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையே, சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜராஜனுக்கு வழங்கப்பட்ட வீட்டை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ராஜபாண்டி இடமிருந்து வீட்டின் சாவியைப் பெற்று ராஜராஜனிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, (செப் - 03) ராஜராஜன் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று குடியேறுவதற்காக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அங்கு சென்ற ராஜபாண்டி, இந்த வீடு தனது வீடு எனக்கூறி ராஜராஜனிடம் தகராறு செய்திருக்கிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜபாண்டி கத்தியால் ராஜராஜனை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ராஜராஜன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் ராஜபாண்டி துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ராமலிங்கம் என்பவரது வீட்டிற்குள் ராஜராஜன் சென்று மறைந்து கொண்ட நிலையில், அங்கு சென்ற ராஜபாண்டி அவரை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து ராஜராஜனின் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ராஜராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அந்த வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் இதனைப் பார்த்து சத்தமிட்டுள்ளார். எனவே ராஜபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, வடகாடு பகுதியில் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ராஜராஜனை கொலை செய்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர் இதற்கிடையே, ராஜராஜனை கொலை செய்ததாக கூறப்படும் அவரது சகோதரர் ராஜபாண்டி, புதுக்கோட்டையில் தனது வழக்கறிஞருடன் சென்று போலீசாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ராஜராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ராஜபாண்டியின் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜராஜனின் மனைவி, தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். சொத்து தகராறில் சகோதரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடகாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது தந்தையான முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலமும் 2010 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அவரது வீட்டிலேயே வெட்டி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்