புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது 23 வயதான மகன் ரஞ்சித் நேற்று வேலையை முடித்துவிட்டு பாத்தம்பட்டியிலிருந்து ஆலங்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மறமடக்கி சாலையில் உள்ள அரசு மதுபான கடையின் அருகே ரஞ்சித்தை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கல்லாலங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர், புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், புதுக்கோட்டை மதிவாணன், புதுக்கோட்டை வசந்தகுமார் மற்றும் கல்லாலங்குடி பகுதியைச் சேர்ந்த கலையரசன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரே ஊரை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் கலையரசன் ரஞ்சித்துடன் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ரஞ்சித் விளையாட்டாக கலாய்ப்பதை பெரிதாக எடுத்து கொண்ட ஸ்ரீதரும் கலையரசனும் ரஞ்சித்தை பிடிக்காமலே அவருடன் நட்பு பாராட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் மீதிருந்த கோபத்தினால் ஸ்ரீதரும் கலையரசனும், ரஞ்சித்தின் காதலி வரும் தனியார் பேருந்தில் ஏறி அவரது இருக்கையில் அமர்ந்து அவரை வம்பிழுத்து உள்ளனர்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த ரஞ்சித் இது குறித்து ஸ்ரீதர் மற்றும் கலையரசனிடம் கேட்டுள்ளார். எனவே நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மூவரையும் சமாதானம் செய்ய ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் வந்து ரஞ்சித்திடம் பேசியுள்ளார். அப்போது அவரிடமும் வாக்குவாதம் செய்த ரஞ்சித் வெங்கடேஷை அடித்ததாக தெரிகிறது.
இதனால் மீண்டும் வெங்கடேஷ், ஸ்ரீதர், கலையரசன் ஆகிய மூவரும் ரஞ்சித்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். எனவே (ஜூலை 16) அன்று இரவு வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்த ரஞ்சித்தை வழி மறித்து மீண்டும் ஸ்ரீதர்,கலையரசன், வெங்கடேசன் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக மதிவாணன், ராஜகோபாலன் ஆகியோர் ரஞ்சித்திடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஐந்து பெரும் சேர்ந்து ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.