விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே, நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருந்த நபரை கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்ததாக கூறப்படும் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தணிகாசலம். இவர் தனது உறவினர்களுடன் திருநெல்வேலியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் குற்றாலம் செல்வதற்காக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். நேற்று (ஆக.28) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்த போது, அங்கு கஞ்சா மற்றும் மது போதையில் வந்ததாக கூறப்படும் இருவர் தணிகாசலத்திடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தணிகாசலத்தை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் போலீசார், தணிகாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நள்ளிரவு சுமார் 3 மணியளவில் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தணிகாசலத்தின் குடும்பத்தினரும் உறவினர்களும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதுடன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை முன்வைத்து வீரத்தமிழர் மக்கள் கழகத் தலைவர் பந்தல் ராஜா மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் புதியராஜ் ஆகியோர் தலைமையில், தணிகாசலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை - தென்காசி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பஷீனா பீபி, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தர்மராஜ், சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்