ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரிக்கு 37 வயதாகிறது. தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவருக்கு, பர்மரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மனாராம் என்பவருடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. முகேஷ் குமாரி தன் காரில் சுமார் 600 கி.மீ பயணம் செய்து அடிக்கடி மனாராமை சந்தித்து வந்துள்ளார்.
முகேஷ் குமாரிக்கு ஏற்கெனவே விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், மனாராமுக்கு விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முகேஷ் குமாரி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 10-ஆம் தேதி, முகேஷ் குமாரி தனது காரில் மனாராமின் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, மனாராமின் வீட்டிற்குச் சென்று அவர்களின் உறவு குறித்து அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனாராம், காவல்துறையினரை அழைத்துள்ளார். பிறகு, காவல்துறையினர் இருவரிடமும் பேசி, இப்பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் அன்று மாலையே, மனாராம் ஒரு இரும்பு கம்பியால் முகேஷ் குமாரியின் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், முகேஷ் குமாரியின் உடலை அவரது காரில் வைத்து விபத்து நடந்ததுபோல் நாடகமாடியுள்ளார். மறுநாள் காலை, தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணையைத் தொடங்கினர். அப்போது, மனாராம் மற்றும் முகேஷ் குமாரியின் செல்போன் டவர் லொக்கேஷன் இரண்டும் ஒன்றாக இருந்துள்ளது. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், மனாராம் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
பார்மர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர சிங், "மனாராம், முகேஷ் குமாரியை கொலை செய்துவிட்டு, அவரது உடலை காரில் போட்டுவிட்டார். தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் குழு வரவழைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.