Ramanathapuram Finance Employee Murder Case 
க்ரைம்

“இரவோடு இரவாக கொல்லப்பட்ட நிதி ஊழியர்” - கடன் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு.. கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட அழுகிய சடலம்!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்...

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடன் வசூலிக்கச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, கடற்கரை மணலில் உடலைப் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதுடைய பிரேம்குமார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த (அக் 5) ஆம் தேதி காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற பிரேம்குமார், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த (அக் 8) ஆம் தேதி இரவு உச்சிப்புளி துத்தி வலசை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காளிதாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பிரேம்குமார் கடன் வசூல் செய்ய வந்தபோது தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் தவறாகப் பேசியதாகக் காளிதாஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பணம் தருவதாகக் கூறி கடந்த (அக் 5) ஆம் தேதி மதியம் 2 மணியளவில் உச்சிப்புளி அருகே உள்ள தோப்புவலசை கடற்கரைக்கு பிரேம்குமாரை வரவழைத்துள்ளார். அங்கு பிரேம்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் உடலைக் கடற்கரை மணலில் புதைத்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காளிதாஸ் உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பித்ததைத் தொடர்ந்து, அங்கு தோண்டி உடலை மீட்டனர். பின்னர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பிரேம்குமாரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடன் வசூலிக்கச் சென்ற நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்