Ranipet Baby Kidnapping Case 
க்ரைம்

“35 நாட்களாகத் தேடல்.. ஆந்திராவில் சிக்கிய 1 வயது குழந்தை” - கண்ணீருட காத்திருந்த பெற்றோர்.. கடத்திய 5 பேர் பின்னணி என்ன?

தனிப்படை போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்...

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் (செப் 24) ஆம் தேதி அதிகாலை காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். குழந்தை காணாமல் போய் 35 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் (செப் 24) ஆம் தேதி அதிகாலை ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் மல்லீஸ்வரி என்ற பெண்ணின் வீட்டில் குழந்தை இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பூபாலன் என்ற பூபதி, குமரேசன், கௌசல்யா மற்றும் ரேணிகுண்டாவைச் சேர்ந்த மல்லீஸ்வரி ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவரை இழந்து குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்த மல்லீஸ்வரிக்கு குழந்தை ஒன்றை வழங்குவதற்காக, அவருக்குத் தெரிந்த கௌசல்யா தனது கணவர் பூபாலனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டு மல்லீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை எவ்வாறு காணாமல் போனது, கடத்தலில் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு உள்ளது, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன ஒரு வயது குழந்தை 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்