க்ரைம்

“கோலாகலமாக நடந்த கிறிஸ்துமஸ் ஏற்பாடு” - கணவன் மனைவி மீது விழுந்த கத்திக்குத்து… ராணிப்பேட்டை தேவாலயத்தில் கேட்ட அலறல் சத்தம்!

அப்போது திடீரென ஆலயத்திற்குள் வந்த ராஜேஷ் வெண்ணிலா சூர்யா ஞானவேல் ஆகிய நான்கு நபர்களும்....

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த களம் பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் வினோத் பிரியா தம்பதியர் இவர்களுக்கும் இவர்களது உறவினரான ராஜ்குமார் என்பவரது குடும்பத்தினருக்கு இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் மற்றும் பிரியா ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென ஆலயத்திற்குள் வந்த ராஜேஷ் வெண்ணிலா சூர்யா ஞானவேல் ஆகிய நான்கு நபர்களும் வினோத்குமார் மற்றும் பிரியா ஆகிய இருவரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ராஜேஷ் தான் கையில் வைத்திருந்த பேனா கத்தியை வைத்து வினோத் மற்றும் பிரியா ஆகிய இருவரையும் குத்தி கிழித்ததாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரியா மற்றும் வினோத் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் தேவாலயத்திற்கு சென்றிருக்கின்றனர்.

பின்னர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி காயமடைந்த வினோத் மற்றும் பிரியாவை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வினோத் மற்றும் பிரியா ஆகிய இருவரும் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ராஜேஷ் வெண்ணிலா சூர்யா ஞானவேல் ஆகிய நான்கு நபர்களின் மீது புகார் அளித்த போதிலும் இவர்களுக்கு திமுக கட்சியை சேர்ந்த ஆற்காடு நகர மன்ற தலைவரின் பின்புலம் இருக்கும் காரணத்தால் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே தன் மீதும் தனது கணவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களின் மீது தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரிக்கையாக தெரிவித்துள்ளார். மேலும் புகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தேவாலயத்தில் அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த கணவன் மனைவி மீது குடும்ப தகராறு காரணமாக கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.