சென்னையில் இப்படியொரு சம்பவமா என்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்த நிகழ்வு. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் ஒருவர், தனது சொந்த வேலையாகப் பொருட்களைக் கொடுக்க ஒரு ஆப் மூலமாகப் பைக் டாக்ஸியை பதிவு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பல்லிக்கரணை பகுதிக்குச் சென்று பொருளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்காக அதே ஓட்டுநரிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநரும் சம்மதித்துள்ளார்.
அந்த ஓட்டுநர், சிறிது நேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் வழக்கமான வழியில் செல்லாமல், பைக் டாக்ஸியை ஒரு இருளான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கே அந்தப் பெண்ணை கழுத்தைப் பிடித்து நெரித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மீண்டும் அவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறார்.
இதையடுத்து, அப்பெண் தனது கணவரிடம் நடந்த விஷயத்தை சொல்ல, உடனடியாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் விரைந்து நடத்திய விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (22) என்ற பைக் டாக்ஸி ஓட்டுநர் என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்ததுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சிவக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுப் போக்குவரத்திற்காக நம்பிச் சென்ற ஒரு பெண்ணுக்கு, நடுவழியிலேயே இப்படி ஒரு கொடூரமான அனுபவம் ஏற்பட்டிருப்பது சென்னை மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.