சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் புனிதன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்திருக்கிறார் மேலும் வழிப்பறி செய்ததாகவும் கூறப்படுகிறது.
மதுபான கடையில் நடந்த தகராறில் புனிதன் எதிர் தரப்பினர் மீது புகார் அளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த காவல் துறையினர் எதிர் தரப்பினர் இவர் மீது அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தொகையை வழங்க மறுத்ததால், புனிதன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதில் ஜாமீனில் வந்த புனிதன் வீட்டில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, “நான்-பைலபிள் வாரண்ட் (NBW) உள்ளது” எனக் கூறி மூன்று போலீசார் புனிதனை அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர்.
புனிதனுக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாக அவரது தாய் தெரிவித்த நிலையில் போலீசார் புனிதனை கைது செய்யும் போது உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்த போதிலும், அவசர சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புழல் சிறையில் உடல்நிலை மோசமடைந்ததால், புனிதனை போலீசார் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிறைவாசி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த புனிதனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது புனிதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், காவலில் துன்புறுத்தப்பட்டதே மரணத்திற்கு காரணம் எனவும் மேலும் அவரது தாய் “போலீஸ் தான் என் மகனை கொன்னுட்டாங்க” என குற்ற சாட்டு வைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் வாக்குவாதம் செய்தனர். எனவே மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மற்றும் புனிதன் உறவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. எனவே மரணத்திற்கான துல்லிய காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.