“அம்மாவை வெட்டிட்டாங்க இப்போவாவது வருவீங்களா” - பட்ட பகலில் நடந்த கொலை வெறி தாக்குதல்… கணவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி!

இதனை பயன்படுத்த கொண்ட தன்சிங் அந்த வீட்டில் தனது சகோதரி குடும்பத்தை தங்க வைத்திருக்கிறார்...
“அம்மாவை வெட்டிட்டாங்க இப்போவாவது வருவீங்களா” - பட்ட பகலில் நடந்த கொலை வெறி தாக்குதல்… கணவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதுடைய தன்சிங். இவருக்கு 45 வயதில் ஜோதிஎன்ற மனைவியும், கௌசல்யா மற்றும் கஸ்தூரி ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். தேன்பாக்கம் பகுதியில் வசித்து வந்த தன்சிங் குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்திருக்கின்றனர் அப்போது தன்சிங் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்சிங் மனைவி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் தன்சிங் சென்னையில் அக்கம்பக்கத்தில் கடனை வாங்கி விட்டு அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடந்த 2023ம் ஆண்டு சொந்த ஊரான தேன்பாக்கத்திற்கு வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். இதனை தொடர்ந்து, ஜோதியும் மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிடலாம் என திட்டமிட்டு தேன்பாக்கத்தில் உள்ள பழைய வீட்டை கடன வாங்கி புதுப்பித்திருக்கிறார். ஆனால் ஜோதிக்கு சென்னையில் சில பணிகள் இருந்ததால் உடனடியாக சொந்த ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்த கொண்ட தன்சிங் அந்த வீட்டில் தனது சகோதரி குடும்பத்தை தங்க வைத்திருக்கிறார்.

அதன்பிறகு ஜோதி மற்றும் அவரது இரண்டு மகள்களையும் தேன்பாக்கம் பக்கமே வர விடாமல் தன்சிங் அடித்து உதைத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தன்சிங்கின் இரண்டு மாக்களும் கடந்த ஆண்டு அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்களது தந்தை மீது புகார் அளித்த நிலையில் போலீசார் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஜோதியால் சென்னையில் வாங்கிய கடனை சமாளிக்க முடியாத சூழ்நிலையில் தேன்பாக்கத்தில் உள்ள வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் பிரச்சனையை தீர்க்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் ஜோதி செய்து வந்திருக்கிறார்.

Admin

அதனை தடுக்கும் விதமாக தன்சிங் அவரது உறவினர்களோடு சேர்ந்து கொண்டு ஜோதிக்கும் அவரது மகள்களுக்கும் தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வந்திருக்கிறார். இதற்கிடையில் வங்கியில் இருந்து ஜோதியின் வீட்டை பார்வையிட்டு நில அளவை செய்ய வங்கி அதிகாரிகள் வர வேண்டி இருந்ததால் வேறுவழியின்றி அச்சிறுப்பாக்கம் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்த ஜோதி இரண்டு பெண் வழக்கறிஞர்கள் துணையோடு வங்கி அதிகாரிகளை அழைத்து வந்து தேன்பாக்கம் வீட்டை அளவீடு செய்துவிட்டு அச்சிறுப்பாக்கம் வந்துவிட்டனர். அப்போது,சற்றும் எதிர்பாராத நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஜோதியின் கணவர் தன்சிங் மற்றும் அவரது தம்பி ஏழுமலை ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜோதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது ஜோதி உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தன்சிங்கை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்சிங்கின் தம்பி ஏழுமலையை தேடி வருகின்றனர். கணவனே தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com