கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அனகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். இவரது கணவர் 43 வயதுடைய ராஜேஷ்குமார் கனரக லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நெற்பயிர் செய்திருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சிலரின் மாடு பயிரை மேய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, உறவினர்களுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். எனவே மங்கம்மாள் இது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் இது குறித்து அந்த உறவினர்கள் மங்கம்மாள் மாமனார் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது மங்கம்மாள் தனது 18 வயது மகளுடன் மாமனார் சீனிவாசனின் வீட்டிற்கு சென்ற நிலையில் இவர்களை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள். மங்கம்மாள், மற்றும் அவருடன் சென்றிருந்த அவரது 18 வயது கல்லூரி மாணவியை பார்த்ததும், “இதற்கெல்லாம் காரணம் இவர்கள் தான்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் மாணவியிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த சிலர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து ஆடைகளை கலைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த தாய் மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என மங்கம்மாள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும், இதனால் தாங்கள் மிகுந்த மனவேதனையிலும் விரக்தியிலும் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பேட்டி அளித்துள்ளனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “இரு குடும்பங்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பகை இருந்து வருகிறது. ஜூன் 3-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மங்கம்மாள் குடும்பத்தினரை அழைத்திருந்தோம். அப்போது மங்கம்மாள் திடீரென மயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். தொடர்ந்து விசாரணை செய்து இன்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.