si with their girlfriends  
க்ரைம்

“மூன்று பெண்களின் வாழ்க்கையை சீரழித்த போலீஸ் எஸ்.ஐ” - 59 வயதில் செய்த 3-வது திருமணம்.. டிஜிபி அலுவலகத்தில் நியாயம் கேட்டு புகார்!

தனியாக வீடு எடுத்து இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கப்பன், தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஆவார். இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றியபோது, வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த விஜயா என்பவருடன் மூக்கப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்த நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதுகுறித்து விஜயாவின் கணவருக்கு தெரியவந்த நிலையில், மூக்கப்பன் காவல்துறை அதிகாரி என்பதால் எதிர்க்க முடியாமல் விஜயாவை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மூக்கப்பன் விஜயாவை திருமணம் செய்து கொண்டு, கிருஷ்ணகிரியில் தனியாக வீடு எடுத்து இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மூக்கப்பன், தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசியதை விஜயா கவனித்துள்ளார். பின்னர், அவர் தூங்கிய பிறகு செல்போனை பார்த்த போது, ஒரே எண்ணுக்கு தொடர்ந்து அடிக்கடி மூக்கப்பன் அதிக நேரம் பேசி இருந்தது நிலையில், அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது கிருஷ்ணகிரி அருகே வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த லதா என்ற தனியார் பள்ளி ஆசிரியையின் எண் என்பது தெரியவந்துள்ளது.

si with 3rd wife latha

இதையடுத்து, விஜயா மூக்கப்பனையும் லதாவையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், எதிர்ப்பை மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது 59-வது வயதில் லதாவை மூக்கப்பன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக விஜயா குற்றம்சாட்டியுள்ளார். இந்த தகவல் தெரியவந்ததைத் தொடர்ந்து, விஜயா சென்னை டிஜிபி அலுவலகத்தில் மூக்கப்பன் மற்றும் லதா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயாவிடம் மட்டும் விசாரணை நடத்தி, புகார் மீது மேல்நடவடிக்கை வேண்டாம் என்று எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஜயா கூறுகையில், "15 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு என்னை விட்டு சென்றுவிட்டார். தற்போது வீட்டிற்கே வருவதில்லை. அவருக்காக வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவித்து வருகிறேன். என்னிடம் இருந்த நகைகளையும் அடமானம் வைத்துவிட்டு, தற்போது என்னையும் புறக்கணித்துள்ளார்" என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மீது இரண்டாவது மனைவி, மூன்றாவது திருமணம் செய்து கொண்டு தன்னை கைவிட்டதாக கூறி அளித்துள்ள இந்த புகார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்