எடப்பாடி பூலாம்பட்டி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ...
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மணி தனது இரு சக்கர வாகனத்தில் அவர் பணி புரியும் தனியார் பள்ளிக்கு செல்வதற்காக பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் மற்றொரு தனியார் பள்ளியின் முன்பு சாலை ஓரத்தில் நின்று ஒரு ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்த போது எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியதில் மணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியை அதிர்ஷ்டவசமாக சிறு காயமின்றி உயிர் தப்பித்தார். இத்தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மேட்டூர் மாதையங்குட்டியைச் சேர்ந்த ரவி என்பவரை பூலாம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..