க்ரைம்

“8-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை” - வகுப்பறையில் நடந்த அத்துமீறல்.. ஆசிரியரின் உண்மை முகம் அம்பலமானது எப்படி?

கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதுடைய சங்கர். இவர் ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 8 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆசிரியர் சங்கர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. வகுப்பறையில் தகாத வார்த்தைகளால் பேசுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது என்று அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இது போன்ற செயல்களில் சங்கர் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர்கள் இது குறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். எனவே நாளுக்கு நாள் சங்கரின் தொல்லை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் இரண்டு மாணவிகள் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் சங்கரை அழைத்து பேசிய போது அவர் தான் எந்த அத்துமீறலில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு மாணவிகள் ஆசிரியர் சங்கர் குறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் மீண்டும் இது குறித்து தலைமையாசிரியருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் பள்ளி ஆசிரியர் சங்கர் மற்றும் புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது ஆசிரியர் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்தது உறுதியானதாகக் கூறப்படுகிறது.

எனவே பள்ளித் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர் சங்கரை போலீசார் கைது செய்து, இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.