சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய தியாகு. இவரது அண்ணன் சந்தோஷ். இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். சந்தோஷிற்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் அவரது மனைவி சந்தோஷை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதே போல தியாகுவிற்கும் அவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
எனவே இருவரும் சந்தோஷ் மற்றும் தியாகு அவர்களது தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது தந்தை உடல் நல குறைபாட்டால் உயிரிழந்தார். பின்னர் தாயுடன் இருவரும் வசித்து வந்தனர். இதில் சந்தோஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த தாய் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் அவரது தாயை குடிபோதையில் கத்தியால் குத்த முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக அண்ணன் மற்றும் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல நேற்று இரவு வீட்டில், மது போதையில் சகோதரர்கள் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது தம்பி தியாகுவை கீழே தள்ளிவிட்டு அருகிலிருந்த செங்கல்லை எடுத்து அவரது தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தியாகு ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தியாகு உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனை பார்த்த அவர்களது தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், உயிரிழந்த தியாகுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சந்தோஷை வீராணம் பகுதியில் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணனே தம்பியை செங்கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.