பெண்கள் வசித்து வந்த வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்களை தவறான நோக்கத்தில் கண்காணித்த வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண்கள், தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இன்று காலையில் தாங்கள் தங்கி இருந்த அறையில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸில் ஏதோ வித்தியாசமாக இருப்பதாக சந்தேகப்பட்டு, அதை திறந்து பார்த்துள்ளனர். அதில் அதிநவீன கேமரா ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த கேமராவைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் உரிமையாளரின் மகன் சரவணன் என்பவர், பெண்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து இந்த ரகசிய கேமராவை சுவிட்ச் பாக்ஸில் பொருத்தியுள்ளார். மேலும், அந்த கேமராவை தனது மொபைல் போனுடன் கனெக்ட் செய்து, பெண்கள் உடை மாற்றுவது மற்றும் அவர்களின் தனிப்பட்ட செயல்களை லைவ் ஆக பார்த்து கண்காணித்து வந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டு உரிமையாளரின் மகன் சரவணனை வானகரம் போலீசார் அதிரடியாக கைது செய்து, அவரது செல்போன் மற்றும் ரகசிய கேமரா உள்ளிட்ட சாதனங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் தனியாக வசித்து வரும் பெண்களின் அறையில் கேமரா வைத்து, அவர்களை தவறான நோக்கத்தில் கண்காணித்து வந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்