Pudukkottai assault case Pudukkottai assault case
க்ரைம்

உதவி செய்வதாக கூறி ‘மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு’ பாலியல் சீண்டல்! உறவினர் போராட்டத்தால் ஒருவர் கைது..! மற்றொருவர்?

வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்மணியை, இருவர் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .

Muthu Lakshmi

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்மணியை, அதே பகுதியை சேர்ந்த இருவர் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து அங்கேயே விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இருவரில், ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை தொடங்கிய போலீசார் மற்றவருக்கு வலைவீச்சு. 

புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி அருகே உள்ள  சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 35வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்மணி அவரது தாயாரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்மணி ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை பகுதியில் செயல்படும் தனியார் அரிசி  ஆலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  மே 17 (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் வேலைக்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் பணி முடிந்து பேருந்துக்காக நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பெண்மணிக்கு தெரிந்த  நபராக கூறப்படும் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த  சேகர் (56) மற்றும் அவரின் நண்பர் மாரிமுத்து (55) என்பவரும்,  அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் வீடு இருக்கும் சாலையில் செல்லாமல் மாற்று சாலையில் வாகனம் சென்றதால் வாய் பேச முடியாத  காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்மணி செய்கை முறையில் ஏன் இந்த வழியில் செல்கிறீர்கள் என்று சேகரிடம் கேட்டுள்ளார். அப்போது அமைதியாக வா என்று கூறிய நிலையில் அந்தப் பெண்மணி முரண்டு பிடித்ததால் சேகரும் மாரிமுத்துவும் சேர்ந்து அந்த பெண்மணியை காரிலேயே தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்மணியை மணக்கொள்ளை பகுதியில் உள்ள முந்திரி காட்டில் வைத்து பாலியல்  தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அங்கேயே இரவு 8.30 மணிக்கு விட்டு சென்றுள்ளனர். 

இந்த நிலையில் அந்தப் பெண்மணி அங்கிருந்து மெல்ல மெல்ல நடந்து சாலைக்கு வந்த போது கிராம மக்கள் அந்த பெண்மணியை  மீட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கறம்பக்குடியில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் வந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணியின் உடலில்  காயம் இருந்ததால் அந்த பெண்மணியிடம் விசாரித்த போது  செய்கை மொழியில் தனக்கு நடந்துவற்றை எடுத்துரைத்துள்ளார். பின்னர் அந்த பெண் காவலர் 108 ஆம்புலன்சை அழைத்து, அந்த பெண்ணை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்மணி வழக்கமாக பணி முடிந்து வரும் நேரத்திற்கு வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அந்த பெண்மணியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பிறகுதான் சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர் அவர்கள் ஆலங்குடி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதையடுத்து மாற்றுத்திறனாளி பெண்மணி துணை காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்போடு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பெண்மணிக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். மீண்டும் அந்த பெண்மணிக்கு காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதலில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு  மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (55) என்பவரை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றோரு நபரான சேகர் (56)  என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு பெண் பாலியல் வழக்கு என்பதால் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் படுக்கை வசதி கூட தரவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்மணியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்மணிக்கு உரிய சிகிச்சையும் உரிய படுக்கை வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.