Sitapur Woman Husband Lover 
க்ரைம்

“கணவரையும் விட முடியாது.. காதலனையும் விட முடியாது” - இரு ஆண்களுடன் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்த ஆசை.. பெண் சொன்ன பதிலால் ஷாக்!

சுபம் வர்மா, தனது மனைவியிடம் நித்தினுடனான தொடர்பை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக...

Mahalakshmi Somasundaram

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் காதலனுடன் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்த விரும்பியதாக கூறப்படும் சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹ்மூதாபாத் கொத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்வாரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அஞ்சுவுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நித்தின் விஸ்வகர்மா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சுபம் வர்மா, தனது மனைவியிடம் நித்தினுடனான தொடர்பை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தினரும் அஞ்சுவுக்கு பலமுறை அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. ஆனால், அவர் தனது காதல் உறவை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினர் இந்த விவகாரத்தை போலீசாரிடம் கொண்டு சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அஞ்சு, கணவரையும் காதலனையும் பிரிய முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவருடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்த விரும்புவதாகவும், கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் கள்ளகாதலனுடனும், அவர் இல்லாத நேரத்தில் கணவருடனும் நேரத்தை பொறுத்து இருவருடனும் வாழலாம் எனவும் அஞ்சு கூறியதாக தெரிகிறது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்த நிலையில், அஞ்சுவின் கணவர் சுபம் வர்மா மற்றும் அவரது காதலன் நித்தின் ஆகிய இருவரும், அஞ்சுவுடன் ஒரே வீட்டில் வசிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Sitapur Woman Husband Lover

இதற்கு சுபம் வர்மாவின் தந்தை மற்றும் சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்ப கவுரவம் மற்றும் சமூக சூழல் குறித்து அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அஞ்சு, அவரது கணவர் மற்றும் காதலனுக்கு நீண்ட நேரம் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும், இதுபோன்ற குடும்ப விவகாரங்களில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழல் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கு உடனடி தீர்வு ஏற்படாத நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது முடிவை தாங்களே எடுத்துக்கொள்ளும் வகையில் போலீசார் அவர்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கணவனை பிரிய மறுத்த பெண், அதே நேரத்தில் காதலனையும் கைவிட முடியாது என கூறி இருவருடனும் ஒரே வீட்டில் வாழ விருப்பம் தெரிவித்த சம்பவம் சீதாப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.