Sivakasi Palpandi POCSO Case 
க்ரைம்

“8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா” - கார் பார்க்கிங் அழைத்து சென்று அத்துமீறல்.. கண்ணீருடன் தாய் புகார்!

சிறுமி வழக்கம் போல விளையாடுவதற்காக பால்பாண்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் 45 வயதுடைய பால்பாண்டி. சிமெண்ட்கடை மற்றும் நில புரோக்கர் வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பால்பாண்டியின் குழந்தைக்கு மன வளர்ச்சி குறைவாக இருப்பதால் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் பால்பாண்டியின் உறவினர் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், 6 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். 

பால்பாண்டி அடிக்கடி அவரது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாய் வழக்கமாக வைத்திருந்த நிலையில் அந்த தம்பதியின் மகள் மற்றும் மகன் சித்தப்பா என்ற முறையில் பால்பாண்டியுடன் நன்றாக பேசி பழகி வந்திருக்கின்றனர். எனவே இரு  குழந்தைகளும் அடிக்கடி பால்பாண்டி வீட்டிற்கும் சென்று விளையாடி வந்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று (செப் 21) மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி வழக்கம் போல விளையாடுவதற்காக  பால்பாண்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

அப்போது வீட்டில்  இருந்த பால்பாண்டி சிறுமியை தனது கார் செட்டிற்கு அழைத்துச் சென்று மடியில் அமர வைத்துக் கொண்டு, அவரது உடலில் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று நடந்தது குறித்து அழுதுக் கொண்டே தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் சிவகாமி உடனடியாக சிவகாசி கண்ணீருடன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பால் பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 வயது சிறுமியிடம் சித்தப்பாவே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்