க்ரைம்

“தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன்” - உடலை வீட்டு வாசலில் வீசிவிட்டு போன் பார்த்த கொடூரம்!

எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த யஷ்வந்த் செலவிற்கான பணத்தை அவரது தாயிடமிருந்து..

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் KVB புரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய யஷ்வந்த். இவரது தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சொந்த ஊரிலேயே பள்ளி படித்த யஷ்வந்த் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிடைத்த வேலைகளை நிராகரித்துள்ளார். மேலும் படிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அறை எடுத்து தங்கிய யஷ்வந்த் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த யஷ்வந்த் செலவிற்கான பணத்தை அவரது தாயிடமிருந்து வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில் யஷ்வந்திடம் அவரது தாய் “படித்த வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி செய்கிறாய்” என கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து யஷ்வந்த் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மகன் வீட்டிற்கு வந்ததால் லட்சுமி அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது சமையலறைக்கு சென்ற யஷ்வந்த் அங்கு இருந்த கத்தியை எடுத்து அவரது தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை வீட்டிற்கு வெளியில் வாசலில் கொண்டு சென்று வீசிவிட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்துள்ளார்.

லட்சுமியின் உடலை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி யஷ்வந்த்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யஷ்வந்த் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வதால் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது கொலையில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.