காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மேவளூர் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் 45 வயதான அரிகிருஷ்ணன். இவரது மனைவி 39 வயதான பவானி. அரிகிருஷ்ணன் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில் பவானி பிரியாணி கடையில் பணிபுரிந்து கொண்டும், வீட்டை பார்த்து கொண்டும் அரிகிருஷ்ணனுக்கு உதவியாக இருந்து வந்தார். மேலும் இவர்களது கடையில் திருவாரூர் பகுதியை சேர்ந்த 29 வயதான மதன் குமார் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரிகிருஷ்ணன் கறிக்கடை மற்றும் பிரியாணி கடைக்கு வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விடுவார். இதற்கிடையே பிரியாணி மாஸ்டர் மதன் “நான் உனக்கு பக்குவம் சொல்லி தரேன்” என கூறி பவானிக்கு பிரியாணி செய்யும் பக்குவத்தை சொல்லி கொடுப்பது போல் பவானியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காலப்போக்கில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அரிகிருஷ்ணன் கடையில் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கடையில் பவானியும் மதனும் பேசிக்கொள்வதை பார்த்து மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த அரிகிருஷ்ணன் தனது பிரியாணி கடையில் சிசிடிவி கேமரா வைத்து மனைவியை கண்காணித்து உள்ளார். அப்போது பவானி கள்ள காதலன் மதன்குமார் இருவரும் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது. இதில் ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணன் பிரியாணி மாஸ்டர் மதன்குமாரை வேலைக்கு வர வேண்டாம் என்று கடையில் இருந்து விரட்டி விட்டு மனைவி பவானியை கண்டித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பவானி மற்றும் மதன் குமார் இனி ஒன்றாக வாழ வேண்டும் அதற்கு இடையூறாக இருக்கும் அரிகிருஷ்ணனை இருவரும் சேர்ந்து கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலி படையை அணுகி அரிகிருஷ்ணனை கொலை செய்ய சொல்லி ரூபாய் 15 லட்சம் பேரம் பேசி 2 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து உள்ளனர். எனவே மேவளூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயற்சித்தனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.
அப்போது கூலிப்படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு “உன் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய 15 லட்சம் பேசி 2லட்சம் முன் பணம் கொடுத்துள்ளார். நீ எங்களுக்கு 5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்” என இருவர் அரிகிருஷ்ணனிடம் பேரம் பேசியுள்ளனர். இதில் சுதாரித்து கொண்ட அரிகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை முயற்சி செய்த பவானி, கள்ள காதலன் மதன்குமார், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் விக்னேஷ்(21), விஜய்(31), மணிகண்டன்(33), ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மனைவி பவானியே பணம் கொடுத்து கணவர் அரிக்கிருஷ்ணன் “எங்கே செல்வார் எந்த நேரத்தில் செல்வார், எப்படி செல்வார்” என கூலி படையினரிடம் தெரிவித்த ஆடியோ கிடைத்தது.
இதையடுத்து பவானி, கள்ள காதலன் மதன் குமார் உள்ளிட்ட 5 பேர் மீது மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ள காதலுக்காக மனைவியே கணவனை கள்ள காதலனுடன் கூலி படை வைத்து கொலை செய்ய துணிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.