
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் கருப்பன் தெருவை சேர்ந்தவர் 48 வயதான ரஞ்சித் குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். ரஞ்சித் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பல வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை ரஞ்சித் குமார் மற்றும் அந்த பெண்ணும் தனிமையில் இருப்பதை பெண்ணின் உறவுக்கார அக்கா மகனான சிறுவன் ஜோஷ்வா விளையாட சென்ற இடத்தில் பார்த்துள்ளார்.
இதனை கவனித்த ரஞ்சித் குமார் ஜோஷ்வாவை வீட்டை விட்டு வெளியில் இழுத்து சென்று அவரது நண்பர்கள் கண் முன்னே சரமாரியாக அடித்து “இனிமே இந்த பக்கம் வரக்கூடாது ஓடிடு” என கூறி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் நடந்ததில் இருந்து ஜோஷ்வாவை அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதை வைத்து கேலி செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஜோஷ்வா தனது சிறுவயதில் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறுகிறார்.
எனவே அன்றிலிருந்து இன்றுவரை ரஞ்சித்தை எப்படியாவது பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். மேலும் ரஞ்சித்தை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். ரஞ்சித்தின் வீட்டிற்கு எதிரில் உள்ள மைதானத்தில் ஜோஷ்வா தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவது வழக்கம் அது போல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று ரஞ்சித்தின் வீட்டிற்கு எதிரில் உள்ள மைதானத்தில் ஜோஷ்வா தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்த ரஞ்சித் வீட்டில் உணவருந்தியுள்ளார்.
பின்னர் வேலைக்கு செல்ல இன்னும் நேரம் இருந்ததால், மைதானத்திற்கு வந்து இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதை கவனித்த ஜோஷ்வா ரஞ்சித்தை பழிவாங்க இதுதான் சரியான நேரம் என எண்ணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் ஜோஷ்வாவை பிடித்து அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் ரஞ்சித்தை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஜோஷ்வாவை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜோஷ்வாவை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு உயிரிழந்த ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுவயதில் தன்னை அடித்ததற்காக ஒருவரை இளைஞர் தனது 29 வயதில் பழிவாங்கியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.