கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதே அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் கள்ளித் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரின் தந்தை பழனிச்சாமியும் கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், தாயாரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
வீட்டில் தனியாக வசித்து வரும் ராஜேந்திரன் வீட்டின் அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் நாய்களை வளர்ப்பதற்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். கடந்த ஒன்றரை மாதமாக கொட்டகையில் தங்கியிருந்த ரம்யாவை பார்ப்பதற்காக அடிக்கடி சிலர் ஆட்டோவில் வந்து செல்வது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால், மாட்டு கொட்டகையை காலி செய்யுமாறு ரம்யாவிடம் ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூர் காவல் நிலையத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். நேற்றும் வழக்கம் போல்
ரம்யாவை பார்ப்பதற்காக சிலர் ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்களை உள்ளே வர வேண்டாம் என ராஜேந்திரன் தடுத்துள்ளார். இதனால் ரம்யாவுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது , ஆத்திரமடைந்த ராஜேந்திரன் ரம்யாவின் கழுத்தை வீட்டில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். பின்னர், கொலை செய்த கையோடு அரிவாளை எடுத்துக்கொண்டு,சூலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்கள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்